அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாகாண சபை மட்டத்திலும், அமைச்சு மட்டத்திலும் நியமனங்கள் வழங்கப்படுதல் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் கூடுதலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தியுள்ளதுடன் மேலும் இதுபோன்ற சில செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்ற மாகாண சபைகளின் அமைச்சர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் இதுவரை அரச வளங்களை மீள ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கூறினார். இதேவேளை, அரச சொத்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் இதுவரை 41 முறைப்பாடுகள் தமது அமைப்பிற்கு பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர குறிப்பிட்டார். இதுதவிரஇ பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல்கள் குறித்து தமது அமைப்பிற்கு 17 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுத்தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட நாள் தொடக்கம் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களை வழங்குதல் குறித்து 70 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
Comments