Sri lanka news

Advertisement

  • Breaking News

    இசை நிகழ்ச்சிகளில் மதுபானத்தினையும் அருந்தி பெண்களையும் சீரழிக்கின்றனர் - அம்பாறையில் ஜனாதிபதி

    நாம் செலவு செய்யும் ஒரு ரூபாவாக இருந்தாலும் அதனை நன்மையான காரியங்களுக்காகவே செலவு செய்ய வேண்டும். அதன் மூலம் எமக்கு நன்மைகள் கிட்ட வேண்டும். ஆனால் தற்கால சூழ்நிலையில்; களியாட்ட நிகழ்ச்சிகளுக்காக மக்கள் பல்லாயிரம் ரூபாக்களை சில மணி நேரத்தினுள் செலவு செய்து பாவங்களை தேடிக்கொள்வது கவலையளிக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

    புத்தசாசன அமைச்சினால் பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்களிடையில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் வைபவம் இன்று(27) அம்பாறை டீ.எஸ். சேனநாயக்க கல்லூரியில் இடம்பெற்றது.
    இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


    இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், அனைத்து மதங்களும் நன்நெறியின் பக்கம் மக்களை வழிப்படுத்தி நிற்கின்றன. குறிப்பாக பௌத்த மதம் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு போதிக்கின்ற போதிலும் சில பௌத்தர்கள் களியாட்ட நிகழ்ச்சிகளுக்காக ஐயாயிரம் ரூபா முதல் ஐம்பதாயிரம் ரூபா வரை சில மணித்தியாலத்தினுள் செலவு செய்து பாவமான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

    இசையுடனான களியாட்ட நிகழ்ச்சிகளுக்காக சென்று அங்கு மதுபானத்தினை அருந்தி பாவங்களைப் புரிவது மட்டுமல்லாது பெண்களையும் சீரழிக்கின்றனர்.
    எமது வாழ்நாளில் ஒரு ரூபா செலவு செய்வதேனும் அதில் நன்மை இருக்க வேண்டும் இதுவே பௌத்த தர்மமத்தின் போதனையாகும்.

    இந்நன்நெறிப் போதனையினை மக்கள் மறந்து செயற்படுகின்றனர். அதனை உயிர்ப்பிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இதனை முன்கொண்டு செல்வதற்கு சிறுவர் பௌத்த நிலையங்கள் முக்கிய பங்காற்றும் என நினைக்கின்றேன்.

    எமது இலங்கை நாடு உலகமே வியந்து பாராட்டும் வகையில் மற்றவர்களை அரவணைக்கும் மக்களும், எழில் மிகு இயற்கை வளங்களையும் கொண்ட சிறப்பம்சம் பொருந்திய நாடாகும். பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற உண்மைக்குண்மையான பௌத்தர்களும் இங்குதான் வாழ்கின்றனர்.

    இந்த நாட்டின் பாரம்பரியம் மிக்க பௌத்த மதத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் சிறுவர்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது.
    பழைமை பொருந்திய திகாமடுல்ல மாவட்டத்தில் பௌத்த மதத்தினைப் போதிக்கின்ற பல விகாரைகளும் வழிபாட்டுத்தளங்களும் பல உள்ள புனிதம் மிகு பூமியாகும்.

    இம்மாவட்டத்தில் பௌத்த அறநெறி பாடசாலைகளை அபிவிருத்தி செய்து அதிகரிப்புச் செய்ய வேண்டும் என இப்பிராந்திய அமைச்சர் தயா கமகே கோரியுள்ளதற்கமைவாக இச்செயற்பாட்டினை மேற்கொள்ள உறுதியளிக்கின்றேன்.

    தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு உருவாகியுள்ள இந்நாட்டின் நல்லாட்சியின் மூலம் நல்லொழுக்கமுள்ள இரக்க குணமுடைய மற்றவரை மதிக்கும் பண்புள்ள சிறார்களை உருவாக்கும் பொறுப்பு எம் எல்லோரிடமும் வழங்கப்பட்டுள்ளன. பௌத்த மதத்தினைப் போதிக்கின்ற பௌத்த அறநெறிப் பாடசாலை நிருவாகிகளுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

    இந்நிகழ்வில் புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர்களான பைஷல் காசிம், அனோமா கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









    Fashion

    Beauty

    Culture