கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியதோடு, இந்திய விமானப்படை நிலையங்களில் போர் விமானங்களை பராமரித்து, கண்காணிக்கும் குழுவில் உயர்பொறுப்பு வகித்துவந்துள்ளார். இவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பீஸ்டன் பகுதியில் வசிப்பதாகவும், புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றிவருவதாகவும் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி கொண்ட அந்தப்பெண் அடிக்கடி பேஸ்புக் வாயிலாக ரஞ்சித்துடன் ஆங்கில மொழிவாயிலாக தொடர்பை ஏற்படுத்தி அவரை காதல் வலையில் சிக்கவைத்துள்ளார். இதனால் ரஞ்சித் பேஸ்புக்கே கதியென ஆகியுள்ளார்.
இதன்பின்னர் ரஞ்சித்தின் தொழில் தொடர்பாக அப்பெண் விசாரிக்க தொடங்கியுள்ளார். இதன்போது போர் பயிற்சிகள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களின் செயற்திறன் ஆகியவற்றைப்பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்த ரஞ்சித் தனது பணியைப்பற்றிய விபரங்கள் அனைத்தையும் வழங்கியதோடு தன்னுடைய சில புகைப்படங்களையும் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரிமாற தொடங்கியுள்ளார். பின்னர், இருவரும் இணைய அழைப்பின்மூலம் பேசிக் கொள்ள தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து மெதுவாக, தனது திட்டத்தின் முதல்காயை அந்த ஐ.எஸ். தீவிரவாத பெண் நகர்த்தியுள்ளார். அதாவது இந்திய விமானப்படையில் என்னென்ன ரக விமானங்கள் உள்ளன? அவற்றின் செயற்திறன் என்ன? என்பது தொடர்பாக ரஞ்சித்திடம் ஒரு பேட்டியை எடுத்த அவர், அதை தான் தொழில் செய்யும் பத்திரிகையில் பிரசுரிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்டமாக, குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் இரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்குமாறு அவர் கேட்க, இந்திய பாதுகாப்பு துறையின் மிகஉயர்ந்த இரகசிய கூடமான அந்த திட்டத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட ரஞ்சித் மறுத்துள்ளார். இதற்கிடையே பெல்காம், சென்னை, டில்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் மாறிமாறி தொழில் செய்துவந்த ரஞ்சித்தின் இணையதள நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு முகாமைத்துவ அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் இரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடிவாதம் பிடித்துவந்த நிலையில், 'இதற்கு முன்னர் இந்திய போர் விமானங்களின் தொழில்நுட்பம் பற்றி பேஸ்புக்கில் பரிமாறிய ரகசிய தகவல்கள், அளித்த பேட்டியின் பதிவுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரியாதையாக, குவாலியர் இரகசியக்கூடம் பற்றிய தகவல்களை எனக்கு தெரிவித்தே ஆகவேண்டும்' என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முகவராக பணியாற்றிவந்த அந்த இங்கிலாந்து பெண்ணுடனான ரஞ்சித்தின் மொத்த தொடர்புகளுக்கான ஆதாரங்களை முழுமையாக சேகரித்த இராணுவ புலனாய்வு மற்றும் டில்லி பொலிஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் பஞ்சாப்பில் உள்ள பதின்டா விமாப்படைத்தளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.
Comments